
அமெரிக்கத் தொலைக்காட்சி நடாத்திய ஆய்வு அறிக்கை…
இந்த ஏழு வழிகளையும் அறிவதும் மற்றவருக்குக் கூறுவதும் அவசியம்…
பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோயை தவிர்ப்பதற்காக டென்மார்க்கில் உள்ள ஊடகங்கள் தொடர் கவனயீர்ப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் அமெரிக்காவின் எம்.எஸ்.என்.பீ.சி தொலைக்காட்சி நடாத்திய ஆய்வின் பின்னர் மார்புப் புற்றுநோயைத் தடுக்க ஏழு முக்கிய ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முறைப்படி கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. டென்மார்க்கில் வருடாந்தம் 4000 பெண்கள் புதிதாக மார்பக புற்றுநோய்க்கு இலக்காகிறார்கள். 50 – 69 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய பெண்களை இது மோசமாகப் பாதிக்கிறது. ஒவ்வொரு ஒன்பது பேருக்கும் ஒருவர் என்றளவில் இதில் சிக்குண்டு போகிறார்கள். உயிரபத்து மிக்க இந்த நோயின் ஆபத்தைத் தவிர்க்க பின்வரும் ஏழு வழிமுறைகளை பின்பற்றும்படி கூறுகிறது.
01. பச்சைத் தேநீர் என்ற பசுமைத்தேநீரைக் குடித்தால் 40 வீதமான பாதுகாப்பு கிடைக்கும். சீனாவில் உள்ள பசுமைத் தேநீரைக் குடிக்கும் 2000 பெண்களிடையே செய்த ஆய்வில் இந்தத் தேநீர் குடித்தவர்களை மார்பக புற்றுநோய் தாக்கவில்லை.
02. உங்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். அதிகூடிய நிறை இருந்தால் ஐம்பதுவீதம் மார்பக புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே அளவான நிறையைப் பேணுங்கள்.
03. ஒழுங்காக தேகப்பயிற்சி செய்தால் சுமார் 20 வீதம் இந்தநோய் ஆபத்தில் இருந்து பாதுகாப்பு பெறலாம். வீட்டு தோட்டத்தில் வேலை செய்வது தேகப்பயிற்சியல்ல. ஒழுங்கான நிலையான பயிற்சிகள் அவசியம் என்பதை மனம் கொள்க.

04. மரக்கறி வகைகள் கொண்ட ஆரோக்கிய உணவை உண்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால் அதிக நன்மை கிடைக்கும்.
05. மதுபானம் அருந்துவதைத் தவிர்க்கவும் தொடர்ந்து பல ஆண்டு காலமாக மது அருந்தி வந்தால் அதற்கேற்ப இந்த நோய் நெருங்கி வரும். ஆண்கள் இரகசியமாக ஊற்றித் தருகிறார்களே என்பதற்காக பெண்கள் குடிப்பது தவறாகும்.
06. புகைத்தலுக்கும் மார்புப் புற்றுநோய்க்கும் நெருங்கிய சம்மந்தம் இருப்பதாக வைத்தியர்கள் உறுதி செய்யாவிட்டாலும் கூட புகைக்காதிருப்பது நல்லது. புகைப்பிடிக்காவிட்டால் 20 வீதமான ஆபத்தைக் குறைக்கலாம். மேலும் கடும் புகைத்தலுக்கு அடிமையாகி பின் அதை சட்டென விடும்போதும் எதிர்த்தாக்கம் இருப்பதை உணரல் வேண்டும்.
07. உடலில் கோமோன்களை சுரக்கவைக்கும் மாத்திரைகளை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பாவித்து வந்தாலும் இந்த நோய் தாக்க வாய்ப்புண்டு.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – பழமொழி.
