இளமைக்கால நிகழ்வுகள் ஒரு பார்வை..!!

கால் காற்று
P.J.Kirubagaran


குறிப்பு: இந்த கட்டுரையை பொறுமையுடன் முழுவதும் வாசிக்கும்படி வேண்டுகிறேன்; பாதியில் நிறுத்திவிட்டால் எனது முழு கருத்தும் உங்களுக்கு புரியாமல், ஒரு பக்கமாக நீங்கள் சிந்திக்கும் வாய்ப்பு உண்டு.

வாலிபப் பருவத்தில் அடியெடுத்து வைக்கின்ற சகோதரிகளாகிய உங்கள் மேலும், சகோதரர்களாகிய உங்கள் மேலும் காதல் காற்று வீசுவது தற்போது வழக்கமாகிப்போனது. காதலியின் பெயரையோ நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதிலும், காதலிக்காவிட்டால் வெறுமை என மனதுடன் காதலிப்பதிலும் பெருமை கொள்ளுகின்ற காலம் இது. காதலிப்பது தவறா? நான் வாழப்போகும் பெண்னை அல்லது வாலிபனை நான் ஏன் தெரிந்தெடுக்கக்கூடாது? என்ற பல தரப்பட்ட கேள்விகள் வாலிபப் பருவத்தில் உங்களுக்கு உண்டாகலாம். வாலிப வயதினை அடையும்போது எதிர்பாலரின் மேலான ஈர்ப்பு தவறல்ல அந்த உணர்வு இறைவனின் படைப்பு; ஆனால், அதனை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளப் பழகவேண்டும். அழகினாலோ, அணிந்து வரும் ஆடைகளினாலோ நீ ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது. அவள்/அவன் யார்? என்பதை அழகிலோ, ஆடையிலோ அல்து அவளது ஒரு சில நடக்கைகளினாலோ, வார்த்தைகளினாலோ மாத்திரம் நீ அறிந்துகொள்ள இயலாது. மனுஷன் முகத்தைத்தான் பார்க்கிறான் என்றுதான் வேதம் சொல்லுகின்றது. மனிதனின் இருதயத்தைக் காணும் சக்தி உலகத்தில் எவருக்கும் இல்லை. அழகையும், ஆடைகளையும் கண்டு மசிந்து காதலில் விழும் பலரால் திருமண வாழ்க்கையினை மகிழ்ச்சியாகத் தொடர இயலவில்லை; காரணம் இதயத்தை அறியாமல் அவர்கள் இடறிவிழுந்ததால். எந்த ஒரு வாலிபனும், வாலிப பெண்ணும் தன்னிடத்திலுள்ள கெட்ட பழக்க வழக்கங்களையும், தோல்விகளையும், பெலவீனங்களையும் வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. காதலியின் நினைவினால் தன்னை மறந்து படிப்பினை இழந்து அவனையே நினைத்து வாழ்க்கையை அழித்து எப்படி வாழ்வது? என்று கேள்விக்குறியோடு நீ உனது எதிர்காலத்தில் நின்றுவிடக்கூடாது.

எந்த வயதில் எதைச் செய்யவேண்டும் என்று சரியாகப் பகுத்து ஆராய்ந்து செயல்படாவிட்டால் உனது வாழ்கை சிதைந்துபோகும். படிக்கின்ற வயதில் காதலித்து படிப்பின் மேல் கவனம் செலுத்த இயலாமல் போவதினால் எதிர்காலத்தில் உண்டாகப்போகும் நஷ்டத்தை நீ ஈடுகட்ட இயலாது. அப்பொழுது நீ எத்தனை கண்ணீர் வடித்தாலும் நஷ்டத்தை நிவிர்த்தி செய்யும் சந்தர்ப்பமும் உனக்குக் கிடைக்காது. பெண் முழு உலகமல்ல, நீ வாழும் உலத்தில் அவள் ஒருத்தி. காதலிக்கும் வாலிபர்களில் பலர் தங்களுக்கு வரும் ஆலோசனைகளை ஒரு காதில் கேட்டு மறு காதில் விட்டுவிடுகின்றனர்; ஆலோசனைகளின் கருத்தை அறிந்துகொள்ளக்கூட அவர்கள் முயற்சிப்பது இல்லை. எங்கே நாம் காதலிப்பதை இவர் வேண்டாம் என்று சொல்லி தடுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேதான் அவர்களது பேச்சு காணப்படும். அதிகமாகப் போனால் ஆலோசனை கொடுப்பவர்களைக் கண்டு விலகிக்கொள்வார்கள். காதலிக்கும் நண்பர்களும், காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களும் உனக்கிருந்தால் நீ கவனமாயிருக்கவேண்டும்; அவர்களுடைய செயல் உன்னையும் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். உனக்கும், அவளுக்கும் இடையில் தரகர்களைப் போல செயல்படுவது, நல்லதைச் செய்வது போல தோன்றலாம் யாரையோ நம்பி ஆழம் தெரியாமால் காலை விடுவது நல்லதன்று. நண்பர்களின் தூண்டுதலினால் நீ தொடங்கினாலும், தூண்டிலில் மாட்டிக்கொள்வது நீதான்.



'காதல்' அல்ல 'விருப்பம்' (Desire)

'காதல்' என்ற வார்த்தையினை உபயோகிப்பதைக் காட்டிலும் 'விருப்பம்' (desire) என்ற வார்த்தையே அதற்கு பொறுத்தமானது. கடையில் காணும் எந்த ஒரு பொருளின் மேலும் விரும்பம் கொள்வது தவறல்ல. ஆனால், அதனை வாங்கும் தகுதி நமக்கு இல்லாதிருக்கும்போது, அதனையே நினைத்து நினைத்து ஏங்குவது தவறல்லவா! அதிக விலையுடைய ஒரு கைக்கடிகாரத்தை கடையில் காணுகின்றீர்கள், அது உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை உண்டாகின்றது, வாங்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்படுகின்றது; ஆனால், கையிலோ பணம் இல்லை; அதற்காக அதனைத் திருடிவிடமுடியுமா? அப்படி திருடினால் அது சரியாகுமா? அப்படி திருடி அகப்பட்டுக்கொண்டால் அதற்குறிய தண்டனையை அனுபவிக்கவேண்டும் அல்லவா? அப்படித்தான் இன்று பல காதலர்கள் மாட்டிக்கொண்டார்கள்? தன்னுடையதல்லாத வாலிபன்மேல் அல்லது வாலிப பெண்ணின்மேல் ஆசை வைத்து அவர்களைத்தான் கட்டாயம் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்து, இறைவன் வேறொருவனுக்காக நியமித்ததை அறியாது இச்சித்து ஆசை வைத்து அவளை/அவனை வசப்படுத்திக்கொண்டு; திருமண வாழ்க்கைக்குப் பின்னர் திருடியதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். வழியில் நிற்கும் யாரோ ஒருவருடைய அழகான காரை photo எடுப்பது தவறல்ல. ஆனாால், அந்த photo வைக் காட்டி அந்த கார் என்னுடையது என்று பிடிவாதம் பிடித்தால், வாதிட்டால் அது தவறுதானே. கல்லூரியில், வெளியில் காணும் வாலிப சகோதரிகளை கண்டு ரசிப்பதோடு நிறுத்தாமல் ருசிக்கும் மனதுடன் செயல்படுவது தவறுதானே; எல்லாவற்றிற்கும் சரியான வழி ஒன்று உண்டல்லவா.

கீழ்கண்ட காரியங்களில் ஏதாவது ஒன்றினால் எதிர்பாலரின் மேல் விருப்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு:

1. வயது வரும்போது உடல் ரீதியாக உண்டாகும் மாற்றத்தினால் எதிர்பாலரின் மேல் ஈர்ப்பு ஏற்படும்.
2. அழகானவர்களைக் காணும்போது விருப்பம் ஏற்படலாம்.
3. அன்பாய் பேசுகிறவர்களைக் கண்டால் விருப்பம் ஏற்படலாம்.
4. அவர்களது பழக்கவழக்கங்களைக் கண்டு விருப்பம் ஏற்படலாம்.
5. காதலிக்கும் மற்றவர்களைக் கண்டு உனது மனதிலும் காதலிக்கும் விருப்பம் ஏற்படலாம்.
6. சினிமாவைச் சார்ந்திருப்பதும் காதலைத் தூண்டுவதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது.
7. தேவைக்கு அதிகமாக எதிர்பாலருடன் பேசுவதால்.

ஆனால், மேற்கண்டவைகளைக் கொண்டு உனது துணையை உடனே நீ தீர்மாணித்துவிடமுடியாது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.



FIR (First Information Report)

ஒரு பெண்ணின் மேல் விருப்பம் உண்டானால், முதலில் அதனை நீங்கள் உங்கள் பெற்றோரிடத்தில் தெரிவிக்கவேண்டும். உன்னைப் பெற்ற பெற்றோர், உன்னை வளர்த்த பெற்றோர் உனது வாழ்க்கைக்கு நல்லவைகளையே யோசிப்பார்கள் என்ற நம்பிக்கை உனக்கு மனதில் உண்டாகவேண்டும். மற்றவர்களைப் பகைப்பதுபோல பெற்றவர்களையும் பகைத்து அவர்களை எதிரியாகப்பாராதே; அவர்கள் உனக்கு எதிரானவர்கள் அல்ல. வேதத்தில் சிம்சோன் ஒரு பெண்னை விரும்பியபோது அவன் முதலில் வந்து அந்த விருப்பத்தை தனது பெற்றோரிடத்தில் தெரிவித்ததான் (நியாயாதிபதிகள் 14:2) இது சரியான வழி.

ஆனால், யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாளை சீகேம் கண்டு அவளைக் கொண்டுபோய் அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தி (ஆதியாகமம் 34:2), பின்னர் தன் தகப்பனிடத்தில் 'இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும்' (ஆதியாகமம் 34:4) என்று சொல்லுகின்றான். இதுதான் இன்றைய நிலை. ஒரு பெண்ணின் மேல் விருப்பம் ஏற்படும் போது எதனை முதலில் செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற காரியங்களிலேயே இன்றை இளைய தலைமுறை தவறுகிறது. பெண்ணின்மேல் விருப்பம் ஏற்பட்டதும், அவளுடன் பேசி நேரம் செலவழித்து, உல்ல
சமாய் சுற்றி, இன்பமாய் நாட்களைப் போக்கி, எல்லைகளையும் மீறி திருமணத்திற்கு பின்னர் அனுபவிக்கவேண்டியவைகளுக்காகக் காத்திராமல் உடலுறவு கொண்டு, இத்தனையையும் பெற்றோருக்குத் தெரியாமல் செய்துவிட்டு பின்னர் அதனை தெரிவிப்பது எத்தனை தவறானது. திருமணத்திற்கு முன் உன்னை அனுபவிக்க நினைப்பவன் திருடன். ஜாமத்தில் வந்து காமத்தைத் தின்றுவிட்டு மோகத்தில் போய்விடுவான். இன்பத்தில் லயித்திருக்கும்போது இதெல்லாம் ஞாபகத்தில் வருவதில்லை. யாரோ ஒரு வாலிபனுக்கு உடலைக் கொடுத்துவிட்டு பின்னர் அவனது அன்பிற்காக வாலிப சகோதரியே நீ ஏங்கி அலையாதே. காமத்தை நிறைவேற்றியவுடன் சில காதலர்கள் காணாமல் போய்விடுவதுண்டு. அவன் வேறெங்கும் போயிருக்கமாட்டான் உன்னைப் போல ஏமாறும் வேறு பெண் அகப்படமாட்டாளா என அலைந்துகொண்டிருப்பான்.அவர்கள் உன்னைக் காதலித்தது அந்தத் தேவைக்குத்தான் என்பது அப்போது உனக்குப் புரியும் என்றாலும், கற்பை இழந்தது இழந்ததுதானே; கருப்பை இருக்கும் ஆனால் கற்பு இருக்காது. வாலிப பெண்ணே வரிபனிடம் நீ நெருங்கிப் பழகினால் உனது கற்பு நொறுங்கிப்போகும் என்பதை மறந்துவிடாதே. செய்வதெல்லாவற்றையும் மறைமுகமாகச் செய்துவிட்டு பின்னர் பெற்றோரின் அங்கீகாரத்தைத் தேடுவது முறையாகுமா? பெற்றோர்கள் உங்கள் இன்பத்திற்கு எதிரிகள் அல்ல, அவர்கள் உங்களை இன்பமாக வைக்க விரும்புகிறவர்களே.

இந்நிலைக்கு வந்துவிட்ட வாலிபர்கள் பெற்றோரை தங்கள் வழிக்குள் எப்படியாவது இழுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்கவேண்டும் என்றே செயல்படுவார்கள். இப்படியானால், பெற்றோரின் விருப்பத்திற்கு இடமில்லையே! அவர்கள் செய்யவேண்டியது என்ன இருக்கிறது? அவளைத்தான் திருமணம் முடிப்பேன் என்று தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டு பெற்றோரிடம் செல்வது தவறான ஒன்று. இது உனது திருமணத்திற்கு பெற்றோருக்கு அழைப்பிதல் கொடுக்கும் நிலை. இச்சூழ்நிலையில், பெற்றோர் மறுத்தாலோ அல்லது எதிராகப் பேசினாலோ என்னவாகும், அவர்களைத்தான் வெறுக்கத்தான் மனம் வரும். பெற்றோரது பதிலை சகித்துக்கொள்ளாமல் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நீங்களே உங்களைத் தள்ளிவிடுவீர்கள். பெற்றோருக்கு இத்தகைய செயல் எத்தகைய மனமடிவை உண்டாக்கும். கட்டாயமாக அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று பெற்றோரின் ஆசியை தூசியைப் போல உதறிவிடும் வாலிபர்களும் ஏராளம்.

பெற்றோரிடம் ஒரு பெண்ணைக் குறித்ததான உனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது பெற்றோர்களின் பதிலுக்கேற்ப உனது முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையுடன் நீ காணப்படவேண்டும். அவர்கள் சாகமாகப் பேசினாலோ அல்லது பாதகமாகப் பேசினாலோ அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உனக்கு வேண்டும்; இதுவே பெற்றோருக்கு நாம் செய்யும் மரியாதை. இதுவே சரியான முறை.


நன்றி - யுத்லைன்110.கொம்