தாலி கட்டும் மரபு, இந்தியர்களிடையே காலங் காலமாக இருந்து வருகிறது.
அதில் எந்தத் தவறும் இல்லைதான். அது வழிவழியாக வந்த மரபுகளில் ஒன்று.
ஆனால், இன்று அது இன்னும் வழக்கத்தில் இருப்பது அவசியமற்ற ஒன்று என நான் கருதுகிறேன்.
அன்று, ஓர் ஆணின் வீரத்தின் அடையாளமாக, ஒரு பெண்ணின் கழுததில், புலி, சிங்கம் ஆகியவற்றின் நகங்களுடன் தாலி கட்டப்பட்டது. அத்தகைய தாலி உள்ள பெண்ணை வேறு ஆண் சீண்ட பயப்படுவான். அப்பொழுது தாலி என்பது ஒரு பெண்ணுக்கு வேலியாக இருந்தது உண்மைதான்.
ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
தாலி, ஒரு 'செண்டிமெண்டல்' விசயமாகி விட்டது.
அது பெண்களை அடிமை படுத்தும் ஒரு கயிறாகிவிட்டது. தாம் அடிமைபடுத்தப்படுகிறோம் என்று அறியாமலேயே பெண்கள் தாலியை ஏற்கிறார்கள்.
மரபை விடக்கூடாது என்றால், புலி நகம் இருந்த இடத்தில் ஏன் தங்கம் வந்துவிட்டது?
இன்று தங்கம் இல்லாமல் தாலி செய்யமுடியுமா? அப்படியே செய்தாலும் ஒரு பெண்ணின் கழுததில் அத்தாலியை கட்டிவிடத்தான் முடியுமா?
இது எப்படி இருக்கிறது என்றால், இரும்பு விலங்கை என் காலில் பூட்டுவதை விட தங்கத்தால் ஆன விலங்கை என் காலில் பூட்டு. இதுதான் எனக்கு ஏற்றது. அப்படி தங்கத்தால் விலங்கிட்டவன் தான் என் கணவன். என் தெய்வம். கணவனே கண் கண்ட தெய்வம் என்று பெண்கள் நினைகிறார்கள்.
ஆனால், இரும்போ , தங்கமோ, விலங்கு, விலங்குதானே!அதுவும், கணவன் உயிருடன் இருக்கும் வரை தாலியை கழற்ற கூடாதாம்.
பெண்களே, நீங்கள் இப்படி செய்து பாருங்கள்.
தங்கத்தால் ஆன, சங்கிலியில், உங்கள் தாலியில் உள்ள மற்ற பொருள்களைப் போல் கோர்த்து, உங்கள் கணவர் கழுததில் மாட்டி, நீங்க உயிருடன் இருக்கும் வரை அதை கழற்ற கூடாது என்று கூறுங்கள்.
என்ன நடக்கும்? எத்தனை பேர் அதை தொடர்ந்து அணிவார்கள்? சிரமமாக இருக்கிறது; இடைஞ்சலாக இருக்கிறது என்று கழற்றி விடுவார்கள் தானே!
ஆனால், நீங்கள் மட்டும் கழற்ற கூடாது.
எது எப்படியோ, இது ஒரு செண்டிமெண்டல் விசயமாக இருப்பதால், தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம்.
அடுத்து வருவதுதான். கொடுமை; கொடுமையிலும் கொடுமை.
கணவர் இறந்து விட்டால், தாலியை பறித்துவிடுவார்கள். அதை பறிக்க சில முன்னாள் சுமங்கலிகள் காட்டும் ஆர்வம் இருக்கிறதே!
அப்படி ஒரு ஆர்வம்; உள்ளுக்குள் மகிழ்ச்சி. நீயும் எங்களுடன் சேர்ந்து விட்டாயா என்று.
இன்று பலர் படித்தவர்கள். நாகரீகம் கருதி, தாலியை பறிக்காமல், மெதுவாக கழற்றி ஒரு கிளாசில் போடுகிறார்கள.
இது காட்டிமிராண்டிகள் சமுகத்தில் நான் கண்ட ஒரு நல்ல மாற்றம். வரவேற்கதக்கதே
இன்னும் இது மாற்றம் காண வேண்டும். எப்படி?
நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தினால், அவர் நமக்கு கொடுத்த பொருள்களை பத்திரப்படுத்தி வைப்போம். இது இயல்பு.
ஒரு கணவன் எவ்வளவுதான், உடை, பணம், நகை கொடுத்தாலும், நம் பெண்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு தாலிதான் மிகப் பெரிய செல்வம்.
முதன் முதலாக, ஒரு ஆண் பலர் முன்னிலையில் அவளை தனக்கானவள்; தன்னில் பாதி என்று அவளுக்கு அங்கீகாரம் கொடுத்து அதன் அடையாளமாக, தாலியை அவன் கட்டுகிறான்.
தாலி கழுததில் ஏறியதும் அப்பெண் முற்றிலும் பரவசமாகிவிடுகிறாள்.
அக்கட்டத்தில் அவளின் ஆனந்தத்தை வார்த்தையால் எழுத முடியாது.
அப்பேர்ப்பட்ட தாலியை, இழக்கும்போது அவள் எவ்வளவு பாதிப்படைவாள் என்று இந்த முட்டாள் சமுகம் ஏன் யோசிக்க மாட்டேங்கிறது?
கணவனே போய்விட்டான், அவன் கட்டிய தாலி மட்டும் எதுக்கு, கழற்று அதை என்றுதான் அனைவரும் கூறுவார்கள்.
ஆனால், இது மகா தவறு என்று நான் நினைக்கிறேன்.
கணவன் இல்லாதபோது, அவன் ஞாபகமாக, அவள் உடலில், அவள் நெஞ்சில், அவள் மார்பகத்தில் உரிமையுடன் அசைந்தாடுவது அந்த தாலிதான். அதில் அவளுக்கு ஒரு தனி இன்பம். தன் கணவன் தன் கூடவே இருக்கிறான் என்று ஒரு சந்தோசம். இந்த சந்தோஷத்தை நாம் ஏன் கெடுக்கணும்?
கணவன் உயிருடன் இருக்கும் போது தாலி கழுததில் இல்லாவிட்டால் பரவாயில்லை. அவன்தான் பக்கத்திலேயே இருக்கிறானே! தாலி எதற்கு?
ஆனால், அவன் இல்லாவிட்டால், ஒரு பெண் அவன் ஞாபகமாக, அவன் கட்டிய தாலியை அவள் கழுததில், அவள் விரும்பும் வரை அணிய விட்டுவிட வேண்டும்.
பிறகொரு நாள், அவளாகவே, தெளிந்து, போதும் என்று கழற்றி விட்டால், அது வேறு விஷயம்.
இப்படிப் பட்ட பெண்தான் இனி உலகத்துக்கு தேவை.
கணவன் இறந்தபின்னும் தொடர்ந்து, தாலியுடன் இருக்கணும்.
பூவும் போட்டுடனும் இருக்கணும்.
இப்படி பெண் இனத்திற்கு, சுய மானமும், மரியாதையும் தந்து அவள் தேவையை அவளே முடிவு பண்ண விடும் சமுதாயம்தான், இந்த உலகத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
இல்லாவிடின், அச்சமுதாயம் ஒரு வரலாறாகிவிடும்.
நாம் மரபுகளையும் கலாசரத்தையும் அவமதிக்கவில்லை


