இரண்டு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு, தோற்றுப் போய், கடைசி நம்பிக்கையுடன் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பெற்றோர் வெளியூரில் இருக்கிறார்கள். நான் சென்னையில் ஹாஸ்டலில் தங்கியபடி ஒரு கல்லூயில் எம்.ஏ படிக்கிறேன். இரண்டு வருடங்களாக நானும், ஒருவரும் காதலித்தோம். இருவரும் வேறு வேறு மதம்.
காதல் துளிர்த்த போது, அது வெற்றியடையுமா, வீட்டில் சம்மதிப்பார்களா என்றெல்லாம் யோசிக்கவில்லை. காலப் போக்கில் கொஞ்சம், கொஞ்சமாக அந்த பயம் பற்றிக் கொண்டது.எனக்காக எதையும் செய்வேன் என்று சொன்ன காதலர், சமீப காலமாக என்னிடமிருந்து விலகி, விலகிப் போகிறார். என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. காரணம் கேட்டால் எங்கள் காதலைப் பற்றி வீட்டில் பேச பயமாக இருப்பதாகவும், தனக்கு வீட்டில் பெண் பார்ப்பதாகவும் சொல்கிறார்.
பெற்றோரை எதிர்த்துக் கொண்டு, வீட்டை விட்டு வர முடியாது என்கிறார். காதல் கைகூடுமா, வீட்டார் ஏற்றுக் கொள்வார்களா என்ற கவலை ஒரு பக்கமிருக்க, என் அப்பாவின் சமீபத்தைய நடவடிக்கைகள் இன்னொரு பக்கம் என்னை பயமுறுத்துகின்றன.
அப்பாவுக்கு பிசினஸில் திடீர் நஷ்டம். ஏகப்பட்ட கடன்... பண நெருக்கடியில், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். வீட்டாரிடம் கலகலப்பாகப் பேசுபவர், கொஞ்ச நாட்களாக யாரிடமும் பேசுவதில்லையாம்.
பிசினஸில் தன்னைச் சுற்றியுள்ள எல்லாரும் ஏமாற்றுவதாகவும், தன்னை அழிக்கத் திட்டமிடுவதாகவும் புலம்புகிறாராம். யாரைப் பார்த்தாலும் தன்னை அடிக்கவோ, கொல்லவோ வருவதாக நினைக்கிறாராம். ரொம்பவும் நொந்து போயிருப்பதாக அம்மா வருத்தப் பட்டார். குடும்பமே கடனில் தத்தளிக்க, என்னுடைய மேல்படிப்பு என்னாகுமோ என்கிற பயமும் எனக்கு சேர்ந்து கொண்டது.
இவை எல்லாம் உண்டாக்கிய குழப்பத்தில், ஒரு மாதத்துக்கு முன்பு, ஒரு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டேன். ஆனால், பிழைத்துக் கொண்டேன். இப்போது 2 வாரங்களுக்கு முன்பு மறுபடி என் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால், என் ஹாஸ்டல் தோழிகள் பார்த்துவிட்டு, மயக்கத்தில் இருந்த என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்துக் காப்பாற்றி விட்டார்கள்.
அவர்கள் யாருக்கும் என்னுடைய எல்லா பிரச்னைகளும் தெரியாது. காதல், கல்யாணம், படிப்பு, குடும்பம் என திரும்பின பக்கமெல்லாம் எனக்கு ஏமாற்றம். என் வாழ்க்கையில் விடிவு பிறக்குமா? எந்த நம்பிக்கையில் நான் வாழ்க்கையைத் தொடர..?
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்புச் சகோதரி,
எந்த நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொடர்வது எனக் கேட்டிருக்கிறீர்கள். நம்பிக்கை தானம்மா வாழ்க்கையே! எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை முதலில் உணருங்கள். இரண்டு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்ட உங்களுக்கு உடனடித் தேவை பாதுகாப்பு. அதீத மன உளைச்சலில் இருக்கிற உங்களுக்கு உடனடியாக மனநல சிகிச்சை அவசியம். ஆறுதலான பேச்சோ, கவுன்சலிங்கோ உடனடியாக உங்கள் மனத்தை மாற்றாது. மருந்துகள் மூலம்தான் அது சாத்தியம். 2, 3 நாட்களில் மாற்றத்தைக் காணலாம்.
காதலிப்பது தவறில்லை. அதிலும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்த உங்கள் தைரியத்தை நான் நிச்சயமாகப் பாராட்டுகிறேன். மற்றவர்களும், பெற்றவர்களும் என்ன நினைப்பார்களோ என்று யோசித்து, உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள நினைப்பது எந்த வகையில் நியாயம்? உங்கள் வாழ்க்கையை விருப்பப்படி வாழும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால், நீங்கள் காதலிப்பதாகச் சொல்கிற நபர், இந்தக் காதலில் உறுதியாக இல்லை என்பது உங்கள் கடிதம் மூலம் தெரிகிறது. அப்படிப்பட்டவர் உங்களுக்குத் தேவையா என யோசியுங்கள்.
உங்கள் அப்பாவின் நிலைமை பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பார்த்தால் அவருக்கு மன அழுத்தம் முற்றியதால் உண்டாகிற ‘சைக்கோசிஸ்’ பிரச்னையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அவருக்கும் மனநல சிகிச்சை அவசியம். 6 முதல் 8 மாதங்கள் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், அவரும் தன்னுடைய பிரச்னையிலிருந்து வெளியே வருவார். சகஜ நிலைக்குத் திரும்புவார்.
இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மனநல மருத்துவரை சந்தித்து, மன அழுத்தத்துக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான். ஓரளவு தெளிவடைந்ததும், படிப்பில் கவனம் செலுத்துங்கள். படிப்பை முடித்துவிட்டு, அப்பாவுக்கு அவரது பிசினஸில் உதவ முடியுமா எனப் பாருங்கள். உருகி, உருகிக் காதலித்தவரை மறப்பது அத்தனை சுலபமில்லைதான். ஆனால், காலம் அதை உங்களுக்கு சாத்தியப்படுத்தும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதற்கேற்ப, காதலில் இருந்து விலகிய நீங்கள், புதிய தோழிகளுடனும், உறவினர்களுடனும் உங்கள் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இன்னொரு முறை தற்கொலை எண்ணம் வராமலிருக்கவும் உங்களுக்கு உங்கள் தோழிகளின் அருகாமை அவசியம். ஏற்கனவே அப்பாவின் நடவடிக்கைகளால் நொந்து போயிருக்கும் உங்கள் அம்மாவுக்கு, உங்கள் பிரச்னையும் சேர்ந்து கொள்ள வேண்டுமா என யோசியுங்கள். காலம் எல்லாக் காயங்களுக்கும் மருந்து போடும். நம்பிக்கையை இழக்காதீர்கள். வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது!
Thanks for dinakaran.com


3 comments
A nice and advice I mostly like it I hope the sister will com for normal situation............
Replyநண்பரே தாங்களின் பதிவுகள் அனைத்தும் படித்து வருகிறேன்
Replyதாங்கள் ஒரு மருத்துவர் போல எல்லா விசயத்தையும் புரியும் படி எழுதி வருகீறீர்கள் மனிதர்களால் மறைத்து வைத்து பேசப்பட்ட பல முக்கியமான செய்திகளை படிக்கும் மிக வியப்பாக உள்ளது பெண்கள் ஒரு அதிசயம் தான் அவர்களை நாம் பேனி காக்க வேண்டிய மாபெரும் பொக்கிஷம் என்பதை தாங்களின் பதிவுகளை படித்து தான் தெரிந்து கொண்டேன் தாங்களின் இப்பெரும் பணி தொடரவும் தாங்களின் ஆரோக்கியம் நலமாக இருக்கவும் துவா செய்கிறேன் நன்றி வணக்கம்
super.......
Reply