டியர் டாக்டர்,
என் வயது 18. கல்லூரியில் படிக்கிறேன். என்னுடைய சீனியர் மாணவரோடு நட்பு மலர்ந்தது. அதைப் பற்றி என் அம்மாவிடம் சொன்னபோது, என்னைக் கண்டபடி திட்டி, அவனுடன் பேசவோ, பழகவோ கூடாது என்றார். என் அம்மா திட்டியதை நான் அப்படியே அவனிடமும் சொன்னேன். தன்னுடன் பேசுவதை நிறுத்தினால், குடிக்க ஆரம்பித்து விடுவதாக அவன் மிரட்டினான். அவனது பேச்சு எனக்குப் பயத்தைக் கொடுக்கவே, அம்மாவிடம் பொய் சொல்ல ஆரம்பித்தேன். அவனிடம் பேசுவதில்லை, பழகுவதில்லை என்று நடித்தேன். செமினார் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியூர் போனேன். அந்த நாள்களில் அவனை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக உணர்ந்தேன். மனத்தளவில் அவனுடன் அதிக நெருக்கமானேன். கொஞ்சம், கொஞ்சமாக அவனைக் காதலிக்கவே ஆரம்பித்தேன். என் காதலைப் பற்றி அவனிடம் சொன்ன போது, அவனது பதில் எனக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அதாவது அவன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், விதி வசத்தால் இருவரும் பிரிந்து விட்டதாகவும், அவளை மறக்க முடியாமல் தவிப்பதாகவும் சொன்னான். ஒருவேளை அவளை மறந்துவிட்டால், என்னை அவனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னான். அன்றிலிருந்து, அதையே மனதில் நினைத்துக் கொண்டு அவனிடம் இன்னும் அதிக நெருக்கமாகப் பழகினேன். அவனும் என் மேல் நிறைய அக்கறை காட்டுகிறான். அவனது வாழ்க்கையில் நான் முக்கியமான நபர் என்கிறான். எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறான்.
சமீபத்தில் எனக்கும், கல்லூரியில் சக மாணவர்களுக்கும் இடையே பெரிய பிரச்னை. எனக்காகப் பேசி, பக்கபலமாக நின்று உதவியவன் அவன்தான். இது நடந்த உடனேயே அவனுக்கு திடீரென தீவிர மன அழுத்தம். தலையில் வேறு அடிபட்டுவிட்டது. டாக்டரிடமும் வர மறுக்கிறான். எனக்கு அவனை நினைத்தால் ரொம்பவே பயமாக இருக்கிறது. என்னை சந்திப்பதைத் தவிர்க்கிறான். திடீரென அவனுக்கு அவனது காதலி ஞாபகம் வந்து விட்டது போல... அதனால்தான் என்னைத் தவிர்க்கிறான் என்பது தெரியும். எப்போது போனில் பேசினாலும் அது சண்டையில்தான் முடிகிறது. கடைசியாகப் பேசிய போது, என்னையும் அறியாமல் அவனை தகாத வார்த்தைகளால் திட்டி, என்னைவிட்டு விலகுமாறு கத்தினேன். நான் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை. என்னையும் அறியாமல் அடிக்கடி இப்படி நடந்து கொள்கிறேன். அவன் என்னைவிட்டு விலகி விடுவானோ என்கிற பயம் எனக்கு. அவனது உறவைத் தக்க வைத்துக் கொள்ள என்னதான் வழி?& சி.எஸ்., சென்னை.
அன்புச் சகோதரி,
இந்த உறவு ஆரோக்கியமானதுதானா, இல்லையா என நேர்மையாக இந்த உறவைப் பற்றிப் பரிசீலனை செய்யுங்கள். இந்த உறவுக்குள் வந்ததில் இருந்து, உங்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று யோசியுங்கள். உங்களை நீங்களே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
இதைக் காதல் எனச் சொல்வதைவிட, இந்த வயதில் எல்லோருக்கும் வரக்கூடிய இனக்கவர்ச்சி என்றே சொல்ல வேண்டும். உங்கள் காதலரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் உங்கள் கண்மூடித்தனத்தை உணருங்கள். உங்கள் உறவு தெரிந்த யாராவது அது வேண்டாம் என அட்வைஸ் செய்து, அதை நீங்கள் அலட்சியப்படுத்தியிருக்கிறீர்களா? அவர்களிடம் உங்கள் காதலரது தவறுகளையும், பலவீனங்களையும் மறைத்து, மழுப்பிப் பேசுகிறீர்களா? அப்படியானால் இந்த உறவின் மூலம் வரக்கூடிய பிரச்னைகள் உங்களுக்குத் தெரிந்திருந்தும், அதை மறைக்கப் பார்க்கிறீர்கள். ஆரோக்கியமான உறவுகளில் இப்படி எந்த விஷயமும் மறைக்கவோ, மழுப்பவோ படாது.
நீங்கள் எதைச் செய்தாலும், அதை உங்கள் காதலரின் விருப்பத்துக்கேற்பவே செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் தோழிகளிடம் காதலரைப் பற்றிப் பேசும் போது, அவர்கள் சொல்கிற நெகட்டிவ் கமெண்டுகளை அலட்சியம் செய்து, ‘அப்படியெல்லாம் இல்லை, அதெல்லாம் உங்களுக்குப் புரியாது’ என்கிறீர்களா? அடிக்கடி இப்படி நடக்கிறது என்றால், யோசிக்க வேண்டியது நீங்கள்தான். அவரிடம் பேசுவதையோ, பழகுவதையோ உங்களுக்கு நெருக்கமான வட்டத்துக்குத் தெரியாமல் வைத்திருப்பதன் மூலம், உங்கள் காதலருக்கு உங்கள் மீதான ஆதிக்க உணர்வு அதிகமாகும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது அவருக்கு மரியாதை குறையும். நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போது உங்களிடம் அதீத அன்புடன் பேசுவதையோ, அன்பளிப்புகளைக் கொடுப்பதையோ வைத்து, அவர்தான் உலகம் என்று மயங்கி விடாதீர்கள்.‘என்னை மாதிரி வேற யாராலயும் உன்னைப் பார்த்துக்க முடியாது. உன்கிட்ட அக்கறை காட்ட முடியாது’ என்றெல்லாம் சொன்னால், அது உங்களுக்கான எச்சரிக்கை சிக்னல்! காலப் போக்கில் உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை குறைந்து, நமக்கு அவனை விட்டால் வேறு யாருமே கிடைக்க மாட்டார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும்.உணர்ச்சிகளுக்கு அடிமையான, சுயக்கட்டுப்பாடில்லாத ஒருவருக்காக உங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்க வேண்டுமா என யோசியுங்கள். இந்த உறவு உங்களுக்குக் கொடுத்தது என்ன? உங்களிடமிருந்து எடுத்தது என்ன என சிந்தியுங்கள். உங்கள் காதலரின் அணுகுமுறை உங்களின் தன்னம்பிக்கையையும், சுதந்திரத்தையும் அழிப்பதாக உணர்கிறீர்களா? ஆமாம் என்றால் இந்த
உறவைவிட்டு விலகுவதுதான் ஒரே தீர்வு. நிதானமாக யோசியுங்கள். உங்களுக்கு வயது இருக்கிறது. வாழ்க்கையும் இருக்கிறது. வாழ்த்துக்கள்!


