டியர் மேடம், என் வயது 26. ஐந்து வருடங்களாக ஒருவரைக் காதலித்து, சமீபத்தில் திருமணமும் செய்துகொண்டேன். காதலுக்கு எங்கள் வீட்டில் பெரிதாக எதிர்ப்பில்லை. ஆனால், கணவர் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை எதிர்த்தே கல்யாணம் செய்தோம். கல்யாணத்துக்குக்கூட அவரது பெற்றோர் வரவில்லை.
எம்.பி.ஏ. படித்திருக்கிற நான், வேலைக்குச் செல்லவில்லை. ஹனிமூனெல்லாம் முடிந்து, குடும்பத்தில் செட்டிலான பிறகு வேலை தேடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தேன். எத்தனை கனவுகளுடனும் கற்பனைகளுடனும் கல்யாணம் செய்து கொண்டேனோ, அவ்வளவும் இன்று ஏமாற்றமாகப் போய்விட்டன. கல்யாணம் முடிந்து, நாங்கள் சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட்டில் குடியேறினோம்.
ஆசை ஆசையாக புது வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த நேரம்... கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் என் மைத்துனர்கள் (கணவரின் தம்பிகள்) இருவரும், ஹாஸ்டலில் ஏதோ பிரச்னை என்று எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். இன்னும் 2 வருடப் படிப்பு முடிகிற வரை அவர்கள் எங்களுடனேயே இருக்கப் போகிறார்களாம். அவர்களைப் பார்த்ததும் கணவருக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.
எனக்குத்தான் தர்மசங்கடமாக இருக்கிறது. இரவுவேலை முடிந்து, கணவர் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவார். தம்பிகளோ, சீக்கிரமே வந்து விடுவார்கள். டி.வியை சத்தமாக வைத்துக்கொண்டு அமர்க்களப்படுத்துவார்கள். சரி... கணவர் வந்த பிறகாவது அவருடன் ஆசையாக நான்கு வார்த்தைகள் பேசலாம் என்றால் அதுவும் முடியாது. இருப்பதோ ஒரே ஒரு பெட்ரூம்.
அங்கே நாங்கள் என்ன பேசினாலும், பக்கத்து அறையில் இருக்கும் அவரது தம்பிகளுக்குக் கேட்கும். இதனாலேயே எங்களுக்குள்ளான அந்தரங்க உறவும் பாதித்தது. ஒரு நாள் இது பற்றி கணவரிடமும் பேசினேன். காதலுக்காக தன் வீட்டாரை எதிர்த்துக் கொண்டு வந்ததால், அவருக்கு தம்பிகள் மூலம் விட்டுப்போன உறவுகள் மறுபடி சேராதா என்கிற ஏக்கம் இருப்பது தெரிந்தது. ‘அப்படித்தான் இருக்கும்... கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்கிறார்.
கணவருக்கு சமைப்பது, துணி துவைப்பது போதாது என்று, அவரது தம்பிகளுக்கும் அத்தனை வேலை களையும் நான்தான் செய்கிறேன். மூன்றே மாதங்களில் எனக்கு எல்லாம் வெறுத்து விட்டது. ஆசைகாட்டி என் கணவர் மோசம் செய்து விட்டாரே எனத் தோன்றுகிறது. என்னால் அந்த வீட்டுக்குள் இயல்பாக இருக்க முடியவில்லை. தற்கொலை எண்ணம்கூட வருகிறது. என் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
- பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.
அன்புத் தோழி,
ஐந்து வருடங்கள் காதலித்ததாகச் சொல்கிறீர்கள். காதலிக்கிற போதுள்ள மனித உறவுகளின் பரிமாணங்கள், கல்யாணத்துக்குப் பிறகு முற்றிலும் மாறிப்போவது இயற்கை. இத்தனை நாள் நாம் காதலித்த பெண்தானே என்கிற எண்ணத்தில், கணவர், மனைவி மீது ஆதிக்கம் செலுத்துவது மிகவும் தவறு. அப்படிச் செய்தால் ஆரம்பத்திலேயே நீங்கள் அதை எதிர்க்க வேண்டும்.
கணவரின் தம்பிகளுக்கும் சேர்த்து, அதுவும் வாலிப வயதில் இருப்பவர்களுக்கு சமைத்துப் போடச் சொல்வதும், துணி துவைத்துத் தரச் சொல்வதும் உங்களை எந்தளவு மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கும் என்பது புரிகிறது. காதலுக்காக வீட்டாரை எதிர்த்துக்கொண்டு வந்த போது பெரிதாகப்படாத உறவுகள், கல்யாணத்துக்குப் பிறகு அவசியமாகத் தோன்றுகிறது உங்கள் கணவருக்கு. அதற்காக புதிதாகக் கல்யாணமான இளம் மனைவி மீது இப்படி பொறுப்புகளை வைப்பது தவறு. மனைவியின் மனதைப் புரிந்துகொள்ளத் தவறியதையும் ஏற்க முடியாது.
நீங்கள் எம்.பி.ஏ. படித்தது, திருமணம் செய்து கொண்டது என எல்லாம் வேறு விஷயங்களுக்காக... இப்படி வேலைக்காரி மாதிரி நடந்து கொண்டு, உங்கள் சுயத்தை இழப்பதற்காக அல்ல. அதை அவருக்குப் புரிகிற படி எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கேற்ற ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிற போது, அதை எதிர்த்து நிற்க வேண்டியது உங்கள் கடமை.
அதே நேரம், கணவருடன் காலம் முழுக்க வாழப் போகிறோம் என்கிற எண்ணத்தை மறக்காமல், பக்குவமாக, யார் மனதும் காயப்படாமல் பேசிப் புரிய வைப்பது உங்கள் சாமர்த்தியம்.இப்போதுதான் வாழவே ஆரம்பித்திருக்கிறீர்கள். எதிர்மறை எண்ணங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, பக்குவமாகவும், பொறுமையாகவும் பிரச்னையை அணுகுங்கள்.
தொகுப்பு: ஆர்.வைதேகி
நன்றி - தினகரன்



1 comments:
DEAR AHAMED NAAN ELLAVTRIRKKUM COMMENT PODALY
Reply26/2/12 ANRU OREORU COMMent POTTEIN.AVARGAL DAILY PODUGIRAARGAL.IDHU EN THAPPU ILLY. SORRY.