ஒரு வாரம் இருக்கும். திருப்பூர் ஸ்டேஷன்ல நின்னுகிட்டு இருந்தேன். நம்ம ஊர்ல என்னைக்கு ரயிலெல்லாம் சொன்ன நேரத்துக்கு வந்துருக்கு? நானும் லேட்டு தாங்கறது வேற விஷயம். ஆனா என்ன விட லேட்டா தான் வருவேன்னு இன்டர்சிட்டி அட்ராசிட்டி பண்ணிச்சு.
இருக்கற பொங்கல் கூட்டத்துல எங்க உட்கார இடம் கிடைக்க போகுது. ஒரு ஓரமா சுவத்துல சாஞ்சு நின்னேன். பக்கத்துல ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் குடும்பம். ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு சிறு பெண் ( 8 வயதிருக்கும் சிறு பெண் என்பதால் அவளை நாம் இத்தோடு மறந்து விடுவோம்) அவர்களோடு ஒரு விடலை பையன் (சுமாராக 14 வயதிருக்கலாம்). பையன் என்னையே பார்ப்பது போல எனக்கு தோன்ற நானும் அவனை சும்மா பார்த்து சிரித்து வைப்போமே என சிரிச்சேன். ஆனா அவன் லுக்கு வேற எங்கயோ போச்சு. எங்கன்னு பார்த்தேன். ஒரு அம்மா தன் பிஞ்சு குழந்தைக்கு ஒரு லக்கேஜ் பார்சலுக்கு பின் மறைந்து பால் கொடுத்துக் கொண்டு இருந்தாங்க. இந்த கூட்டத்துல அவங்களால செய்ய முடிஞ்சது, அவ்ளோ தான்.
அவன் பார்வை எங்கே போயிருக்கும்ன்னு உங்களால புரிஞ்சுக்க முடியுதா? அப்படி பார்ப்பது அவன் தவறா, அந்தப் பெண்ணின் தவறா, இல்லை இவனனை பெற்று வளர்த்த தாயின் தவறா என்று என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. பையன் நீண்ட நேர தயக்கத்துக்கு அப்பறம் தன் அம்மாவை மெதுவா கூப்பிட்டான். நான் பார்த்துக்கொண்டே நின்றேன். அந்த பையன் அந்த குழந்தையும் அம்மாவும் இருந்த திசை நோக்கி கை நீட்டி தன் அம்மாவின் காதில் எதோ சொன்னான். அந்த பெண்ணின் முக மாற்றத்திலிருந்து அவன் என்ன சொல்லி இருப்பான்னு என்னால ஊகிக்க முடிஞ்சுது. அவள் தன் மகனிடம் அங்கெல்லாம் பார்க்க கூடாது என என் வரையில் கேட்கும் படி சொல்லிவிட்டு விட்டுவிட்டாள். ஆனாலும் ரயிலேறும் வரை அவள் முகம் பவர் ஸ்டார் படம் பார்த்தது போலவே இருந்தது.
நாம் ஒவ்வொருவரும் நம் சிறு வயதுகளில் நிச்சயம் இப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கடந்து வந்து தான் இருப்போம்.
எனக்கும் அப்படி ஒரு தர்ம சங்கடமான நிலை வந்து இருக்கிறது. நான் அப்போது தான் கல்லூரியில் நுழைந்த பருவம்.
’நீயா நானா’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தோம். “திருவிழாக்கள்” பற்றிய எதோ ஒரு தலைப்பு. என் அப்பா அம்மாவும் என்னோடு சேர்ந்து டீவி பெட்டிக்குள் தலையை விட்டு இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் திருவிழாவின் போது தன் ஊரில் போடப்பட்ட ஒரு பாடலை பாடிக்காட்டினாள் “பள்ளிக்கூடம் போக வேணுமா இதுக்கு புத்தகமும் வாங்க வேணுமா?” அவள் பாடிய விதமும் அதன் அர்த்தமும் எனக்கு விளங்கி விட்டதால் சட்டுன்னு சிரிச்சு தொலைச்சிட்டேன். ஆனா எங்க அப்பா, அம்மாவுக்கு அதோட அர்த்தம் புரியலை.
அப்பா என்ன பார்த்து “என்ன பாடுனா, எனக்கு சரியா கேக்கல”ன்னாரு. எனக்கு சட்டுன்னு இதயமே நின்னுடும் போல இருந்துச்சு. சரின்னு அம்மாவைப் பாத்தேன். அவிங்க சட்டுன்னு நிலைமைய புரிஞ்சுக்கிட்டு சமாளிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் என் போனோட வால்யூம் பட்டனை அமுக்கி ஃபோன் வந்தா மாதிரி பேசிக்கிட்டே ரூமை விட்டு நழுவிட்டேன்.
இதற்கு பின்னும் , இன்னும் பல சந்தர்பங்களிலும் எனக்குள்ள உதிச்ச இயல்பான கேள்வி - ஏன் இதை இப்படி மறைச்சு வெக்கறாங்க. இது என்ன அவ்வளவு கொடூரமான விஷயமா?
இதை நம்ம ஊர்ல மென்ஷன் பண்ற விதமே காமெடியா இருக்கும். இன்னான்னா “தப்பு” (இந்த பேர்ல தப்ப பத்தி தப்புத தப்பா சொல்லித்தர ஒரு தப்பான சினிமா வந்தது வேற கதை) . அவுங்க “தப்பு” பண்றாங்கன்னு எவனோ ஒருத்தன் சொன்னா அவன் சொல்ற டோனை வெச்சி அவன் இதை சொல்றான இல்லை வேற தப்பு எதாவதான்னு கண்டு புடிக்கறதுக்குள்ளயே நம்ம பெண்டு கழண்டுடும்.
காலேஜுல ஒரு தடவ ஒரு பையனுக்கு காய்ச்சல் , அவன் மொத பென்ச்சுல உக்காந்து தூங்கிக்கிட்டு இருந்தான். டீச்சரம்மா வந்து “ஏன் காய்ச்சல்ன்னா லீவு போடோனும்மில்ல… தம்பி கடைசி பென்ச்சுல போய் படுத்துக்கோ” ன்னாங்க . அவனும் எந்திரிச்சான். அப்பன்னு பாத்து சனி பெர்மனட்டா மூணாவது மாடில பிளாட் போட்டு தங்கி இருக்கற நம்ம வாயி “ குப்பற தான் படுக்கோனும் , தனியா”ன்னு அவங்க கோவைத் தமிழைக் கிண்டல் பண்ண நினைச்சு வேற ஒரு கிண்டலையும் சேத்து பண்ணிட்டேன். இருந்த பிகருங்க எல்லாம் அந்த நேரம் என் மேல இருந்த பாசத்துல விழுந்து விழுந்து (என் மேல இல்ல) சிரிச்சு வெச்சுருங்க . அப்பாலிக்கா அப்பாலஜி லெட்டர் எழுதுனது வேற கதை.
இந்த “இலை மறை காய் மறை”ங்கற டெர்ம எவன்டா கண்டு புடிச்சது. இப்படி பாதி கொழம்பி இருக்கறவன ஆர்வத்த தூண்டி வுட்டு முழுசா கொழப்பறத்துக்கு சும்மவே இருக்கலாம்.
ஆனா பாக்கியராஜ் முருங்கக்காயை கையில எடுக்க காரணமா இருந்த அதே ஆர்வம் எனக்கும் இருந்துச்சு. அப்படி என்ன தான் மறைச்சு வெக்கறீங்க? உலக அளவுல கற்பழிப்பு , பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதானவன் கொடுமை இங்க தான் அதிகமா நடக்குது காரணம் என்ன தெரியுமா? நாம மறைச்சு வெக்கறது தான். நான் பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சென்று உள்ளேன் (கூகிள் மேப்ஸ்ல தான்!). அங்க எல்லாம் மேல் சட்டையின் அளவுகள் எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கும் தெரியும் (கூகிள் இமேஜ் வழியா). அங்க கற்பழிப்புகள் கம்மி (இருந்தா தான அழிக்கறதுக்குன்றீங்களா?). ஒரு சாக்லேட்டை சும்மா வெச்சுட்டு போனீங்கன்னா ஒரு குழந்தையோட கவனம் அதுல போகாது.
இதைத் தொடாதன்னு சொல்லிட்டு போனா நிச்சயம் அந்த கொழந்தை அதை தொட்டே தீரும். நம்ம எல்லாருமே இங்கே கொழந்தைங்க தான். (நான் மனச சொன்னேன்)
உளவியல் ரீதியான பால் பாகுபாடு பற்றிய கல்வி இங்க நிரம்பவே அவசியம். ஒரு தாய் எப்படி தன் பெண் பிள்ளை கிட்ட மென்சுருஷேன் சைக்கிள் பத்தி சொல்லி புரிய வைக்கறாளோ. அதே போல ஒவ்வொரு தந்தையும் தன் மகன் கிட்ட இதைப் பத்தி எல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டியது அவசியம் . அது எல்லாம் தானா வயசுல கத்துக்குவான்னு நீங்க சொல்றது புரியுது. ஆனா அப்படி அவன் தானா கத்துக்குவான்னு விட்டா அதுல அவன் கெட்டு போறதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே ஜாஸ்தி. இதுலே இன்னோரு முக்கியமான பிரச்னை என்னான்னா இப்படி தானா கத்துக்கற பெரும்பாலான இளைஞர்கள் பெண்ணை ஒரு பொருளாத் தான் பாக்கறாங்க. அவள ரத்தமும் சதையும் கூடவே ஒரு மனசும் சேர்ந்த ஒரு மனுஷியா பாக்கற மனோபாவம் அவங்களுக்கு நிச்சயம் வராது. இன்னொரு தபா பையன் எங்கன்னா பாத்துட்டு இருந்தா சும்மா புடிச்சு கத்தாம எடுத்து சொல்லுங்க.
இன்னா புரியுதா?



1 comments:
ur post are super
Reply