பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி - பகுதி 03


அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
புகைப்படங்களில் வங்கிரகம் காணப்படுகிறது. பிடிக்காதவர்கள் ஆரம்பத்திலேயே தவிர்க்கவும். புகைப்படங்கள் தெளிவான விளக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளது. இந்த பதிவின் நோக்கம் இன்றைய ஆண் பெண் அந்தரங்க அறியாமையை போக்குவதற்கும். ஒரு மனத்தெளிவினை பெறுவதற்கு மட்டுமே... இது 5நாட்கள் தொடராக வெளிவரும். பிடிக்காதவர்கள் தயவுசெய்து இப்பதிவை தவிர்கவும். இளமையின் நோக்கம் மக்கள் மத்தியில் வக்கிரகத்தினை வளர்பது அல்ல... “அந்தரங்கம் தூய்மையானது” அதன் அடிப்படை மற்றும் உள்மனத்தின் கேள்வி, உங்கள் ஜயங்களை போக்குவற்கு மட்டுமே... தொடர்த்தும் உங்கள் அதரவினை நோக்கி.....
.......................................................................................................................................................................

பருக்களின் தோற்றம்:

நம்மில் சிலருக்கு பருக்கள் ஏற்படுகிறது. இந்த பருக்கள் முகத்திலும், சில நேரங்களில் தோள்களிலும், முதுகு புறத்திலும், நெஞ்சிலும் தோன்றுகின்றன. பருக்கள், பருவமடையும் சமயத்தில் நம்முடைய உடம்பினுள் இருந்து அதிக படியான எண்ணெய் சுரப்பு ஏற்படுவதன் காரணமாக தோன்றுகின்றன. சில சமயத்தில் எண்ணெய்ப் பசையை உற்பத்தி செய்யும் சிறு சுரப்பிகள் தடைப்பட்டு வீக்கமடைகின்றன. இவ்விடத்தில் பருக்கள் உருவாகின்றன. பொதுவாக இச்சமயத்தில் எல்லோருக்கும் பருக்கள் ஏற்படுகின்றன. இதனால் சலனப்படத் தேவையில்லை. உங்கள் சருமத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். தினமும் இரண்டு தடவை கழுவுங்கள். காய்கறிகளும், பழவகைகழும் நிறைந்த சத்தான உணவை சாப்பிடுங்கள். நன்றாகத் தூங்குங்கள்.

வளர்ச்சியடையும் போது உள்ள உங்கள் உடலமைப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படமானது நீங்கள் வளரும் போது உங்கள் உடலமைப்பு எவ்வாறு தோன்றும் என்பதை காட்டுகிறது. முதல் படமானது பருவமடைவதற்கு முன்னால் உள்ள ஒரு சிறுமியினுடையது. அவள் வளர ஆரம்பிக்க அவளின் ஸ்தனங்கள் வளர்ச்சியடைவதையும், அவள் உயரமாக வளர்வதையும், அமைப்பான இடுப்பை பெறுவதையும், பிறப்பு உறுப்பு பகுதியிலும், அக்குள்களிலும் முடி வளருவதை கவனிக்கலாம்.

நீங்கள் பார்க்கும் வேறு சில மாற்றங்கள்:

பருவமடையும் போது உங்கள் யோனியிலிருந்து தெளிந்த வெண்மையான நிறத்திலுள்ள திரவம் வெளியேறுவதை (Discharge) நீங்கள் கவனிக்கலாம். இதுவும் நடக்க வேண்டிய நிகழ்வே. உங்கள் உடம்பினுள் சில மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. இதை நீங்கள் பார்க்க முடியாது. இந்த மாற்றங்கள்தான் இந்த வெளியேற்ற (Discharge) நிகழ்வுக்கு உதவுகின்றன. பருவமடையும் போது உங்கள் உடலின் உள்ளே ரசாயன தகவல் பரிமாற்று ஊக்கிகளான ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் நீங்கள் உங்கள் உடம்பின் வெளிபுறத்தில் காணும் மாற்றங்களுக்கும், உங்கள் யோனியின் வழியாக நிகழ்ந்த அந்த வெளியேற்ற நிகழ்வுக்கும் காரணமானவை.

மிக முக்கியமான மாற்றம் - மாதவிடாய்:

உங்களது முதல் மாதவிடாயானது நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். இது சிறுமி என்ற பருவத்தில் இருந்து முதிர்ச்சி அடைந்து முதிர் பெண்ணாக மாற்றமுறும் கிளர்வூட்டும் கணமாகும். மாதவிடாய் ஏற்படுவதற்கு முனனால் அதைப் பற்றி அறியாமல் இருந்தாலோ அல்லது யாரும் உங்களுக்கு மாதவிடாயின் போது என்ன நடக்கும் என்று கற்றுக் கொடுக்காமல் இருந்தாலோ அது பயமூட்டக் கூடியதாக இருக்க வாய்ப்புண்டு. அதனாலேயே நான் உங்களுடன் இந்த விசயங்களை பற்றி பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். நான், நீங்கள் மாதவிடாயைப் பற்றிய எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இதை அறிந்துக் கொணடால், மாதவிடாய் வருவதை குறித்து நீங்கள் பயப்படமாட்டீர்கள்; மாறாக மாதவிடாயானது, எப்படி உங்களை சக்தியுள்ளவர்களாக்குகிறதென்பதயும், எவ்வாறு நீங்கள் பலம் பொருந்திய அற்புதமானப் பெண்ணாக மாறுகிறீர்கள் என்பதையும் உணருவீர்கள்.

மாதவிடாய் என்பதுதான் என்ன?

நாம் மாதவிடாய் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குவோம். உங்களுக்கு ஏற்கனவே கருப்பை, சூலகங்கள், பேலோபியன் குழாய்கள் (Fallopian Tubes) போன்ற உங்களின் உள் பகுதிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த பகுதிகளை நான் உங்களுக்கு முதலில் அறிமுக படுத்துவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், இந்த அறிமுகம் ஏன், எப்படி மாதவிடாய் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு உதவுகிறது. எனவே அந்த பகுதிகளை குறித்து மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.


இது ஞாபகமிருக்கிறதா? சூலகத்திலுள்ள முட்டையை பாருங்கள். அது சூலகத்தை விட்டு புறப்பட்டு பயணத்தை தொடங்குகிறது. இந்த பகுதிகள் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நான், ஒவ்வொரு மாதமும் உங்கள் உடம்பில் நிகழும் மாற்றங்களை காட்ட போகிறேன். முட்டையானது சூலகத்திலிருந்து ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. இந்த பயணத்தின் காரணமாகவே உங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. நாம் ஒரு முட்டையுடன் (Ovum) பயணப்பட்டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஒரு முட்டையின் பயணம்:

உங்கள் முதல் மாதவிடாய்க்குப் பின் ஒவ்வொரு மாதமும் உங்கள் மூளையானது சூலகத்திலுள்ள முட்டைகளுக்கு ஒரு தகவல் அனுப்புகிறது. "வளர்" என்று அந்த தகவல் கூறுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் சூலகத்திலுள்ள பல முட்டைகளில் ஒரே ஒரு முட்டை மட்டும் வளர்கிறது. அந்த முட்டையானது முழுமையாக வளர்ச்சியடைந்த உடன், மூளையானது அந்த முட்டைக்கு "புறப்படு உன்னுடைய மாதாந்திர பயணத்தை தொடங்கு" என்ற தகவலை கொடுக்கிறது. இவ்வாறு முட்டை சூலகத்தில் இருந்து புறப்பட்டு பயணப்படுவது ஓவுலேசன் (Ovulation) எனப்படுகிறது. சூல் பயணமானது (Ovulation) மாதவிடாய் ஏற்படுவதற்கு 13 முதல் 15 நாட்களுக்கு முன்னால் தொடங்குகிறது. மாதவிடாயின் முதல் நாளை உங்கள் மாதவிடாய் சுழலின் முதல் நாளாக கணக்கிட வேண்டும்.

ஆக முட்டையானது சூலகத்தை விட்டு வெளியேறுகிறது. அடுத்து நடப்பது என்ன?

சூலகத்தை விட்டு முட்டை வெளியேறுவதற்கு சற்று முன்னால் உடம்பானது கருக்கொள்வதற்கு ஏற்றவாறு தன்னை தயார்ப் படுத்திக் கொள்கிறது. கருக்கொள்வதற்கும் இதற்கும் என்னத் தோடர்பு? இச்சிறு முட்டையானது சிசுவின் உருவாக்கத்தில் ஈடுபடும் முதல் பாதியாகும். மறுபாதியானது விந்தணுவாகும். இது ஆணிடமிருந்து வருகிறது. முட்டையும், விந்தணுவும் சேர்ந்தால் அது கருவுற்ற முட்டை எனப்படுகிறது. இந்த கருவுற்ற முட்டையே சிசுவின் தொடக்கம். எனவே, முட்டையானது சூலகத்தை விட்டு புறப்படும் போது, அது தன் பயணத்தின் போது ஒரு விந்தணுவை சந்திக்க கூடும் என உடம்பானது எப்போதும் எதிர்பார்க்கிறது. எனவே உடம்பானது இந்த சந்திப்பிற்காக தன்னை தயார் செய்துக் கொள்கிறது. அது எப்படி என இனி பார்ப்போம்.

முட்டைக்காக உடம்பு எப்படித் தன்னை தயார் செய்து கொள்கிறது?

உடம்பானது ரசாயன தூதுவராக செயல்படும் எஸ்ட்ரோஜன் (Estrogen) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோனானது கருப்பையின் சுவரை திசுக்களாலும் , இரத்த குழாய்களாலும் திண்மையானதாக மாற்றி கருவுற்ற முட்டை வளர்ச்சியடைய உதவும் பொருட்டு கருப்பையை தயார் படுத்துகிறது. புரோஜெஸ்டெரோன் (Progesterone) என்ற மற்றொரு ஹார்மோனானது கருப்பையின் சுவரை இன்னும் திண்மையானதாக மாற்றி கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவாறு கருப்பையை தயார்படுத்த உதவுகிறது. கருவுற்ற முட்டைக்கு நல்ல அணையாக இருந்து ஊட்ட சத்தை வழங்கி சிறு முட்டையிலிருந்து முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக மாறுவதற்கு உதவும் பொருட்டே கருப்பையின் சுவரானது திண்மையானதாகவும், இரத்தம் நிறைத்ததாகவும் மாறுகிறது.

சரி. இதுவரை நடந்தவைகளைப் பற்றி புரிந்துக் கொள்ள முயலுவோம்.

இவையெல்லாம் பெரிய வார்த்தைகள் என்றும், அதிக படியான தகவலென்றும் எனக்குத் தெரியும். ஆனால் முக்கிய தகவலானது, உடலானது கருப்பையின் சுவரை வளரும் சிசுவிற்கு ஊட்டச் சத்தை வழங்கும் வண்ணம் திண்மையானதாகவும், இரத்தம் நிறைந்ததாகவும் மாற்றி கருவுற்ற முட்டைக்காக தன்னை தயார் படுத்திக் கொள்கிறது என்பதாகும். ஆனால், உடலானது முட்டைப் புறப்பட தயாராகும் ஒவ்வொரு தடவையும், அதாவது ஒவ்வொரு மாதமும் தன்னை இவ்வறு தயார்படுத்துகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும், உங்கள் முட்டையை சந்திப்பதற்கு ஆணிடமிருந்து வரும் விந்தணு அங்கு இல்லாமலிருக்கிறது. (இது நீங்கள் ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது மட்டுமே நடக்கிறது. ). இவ்வாறு விந்தணு இல்லாமல், முட்டையானது தனியாக பயணத்தை மேற்கொண்டால் என்ன நடக்கிறது?

நாம் முட்டைக்கு திரும்புவோம். சூலகத்தை விட்டு முட்டைப் புறப்படும்போது என்ன நடக்கிறது?

முட்டையானது அற்புதமான இயற்கை சாலையான பேலோபியன் குழாயின் வழியாக பயணித்து கருப்பைக்கு செல்கிறது. விந்தணு இருக்கும் பட்சத்தில் அது முட்டையை பேலொபியன் குழயில் சந்திக்கிறது. இல்லாவிட்டல் முட்டையானது பயணத்தை தொடர்கிறது. பின் அது திசுக்களாலும், இரத்தத்தாலும் திண்மையான நிலையை அடைந்த சுவரை உடைய கருப்பையை அடைகிறது. விந்தணுவை சந்திக்காத காரணத்தால் அது கருப்பைக்கு சென்று அங்குள்ள திண்மையான சுவரில் கரைந்து விடுகிறது.

இப்போது முட்டையானது கரைந்து விட்டது. அப்படியானால் கருப்பையினுள் திண்மையான சுவரிலுள்ள திசுக்களும் ரத்த நாளங்களும் தேவையில்லை என உடலானது உணருகிறது. ஏனென்றால் ஊட்டச் சத்துத் தேவைப்படும் கருவுற்ற முட்டையானது அங்கு இல்லை. எனவே உடலானது "இங்த சுவர் பகுதியை வெளியேற்றி விட்டு, அடுத்த மாதத்தின் முட்டை விந்தணுவை சந்திக்கிறதா என பொறுத்திருந்து பார்க்க்லாம்" எனக் கூறுகிறது. இவ்வாறு களையப்பட்ட கருப்பையின் சுவர் பகுதியானது கருப்பையின் அடிப்பகுதியை அடைந்து வெளியேறி செர்விக்ஸ் (Cervix) பகுதி வழியாக யோனியை அடைந்து யோனித் துவாரம் வழியாக வெழியேறுகிறது. இந்த இரத்ததைததான் நீங்கள் மாதவிடாயின் போது வெளிவரக் காண்கிறீர்கள்.

மாதவிடாய் பற்றி நாம் ஏராளமான தகவல்களை பார்த்தோம். நாம் பார்த்த விசயங்களை கீழ்க்கண்டவாறு சுருக்கி கூறலாம்.

நம் கருப்பையானது தன் சுவர் பகுதியை களையும் போது நமக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. கருவறை சுவரை திண்மையடையச் செய்வதன் மூலம் நம் உடம்பானது கருவுற்ற முட்டைக்காக தன்னை தயார் செய்கிறது. ஒரு முட்டைப் பயணப்பட ஆரம்பித்தப் பிறகு நீங்கள் உடலுறவு கொள்ளாத பட்சத்தில், விந்தணுவை சந்திக்காமல் அது பேலோபியன் குழாய் (Fallopian Tubes) வழியாக பயணப்பட்டு கருத்தரிக்காமல் கருப்பை சுவரில் கரைந்து விடுகிறது. முட்டையானது கரைந்தது உணரப்பட்டவுடன் கருப்பை சுவரானது களையப்படைகிறது. இந்த நிகழ்ச்சி போக்கு ஒரு முழு மாதக் காலத்தை எடுத்துக் கொள்கிறது. பின்னர் இது திரும்பவும் அடுத்த மாதம் முட்டை தயாரானவுடன் நிகழ்கிறது.

மாதவிடாய் சுழலின் கால அட்டவணை:


வழக்கமாக நாம் உங்கள் மாதவிடாயின் முதல் நாளை உங்கள் மாதவிடாய் சுழற்சியின் (Cycle) முதல் நாளாக எண்ணுகிறோம். எல்லாப் பெண்களும் 28 நாள் சுழற்சியைக் கொண்டிருப்பதில்லை. சிலருக்கு சுழற்சி நீண்டதாகவும், இன்னும் சிலருக்கு குறுகியதாகவும் அமையலாம். சிலருக்கு மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் ஏற்படுகிறது. அதாவது, மாதவிடாயானது ஒவ்வொரு மாதமும் சரியாக வருவதில்லை. இதை குறித்து நாம் சற்று பின்னர் பார்க்கலாம்.

மேலே கொடுக்கப்பட்ட விபரம் 28 நாள் சுழற்சியின் போது ஒவ்வொரு நாளும் உங்கள் உடம்பினுள் நடக்கும் நிகழ்வுகளை காட்டும் ஒரு நல்ல சுருக்கமான விளக்கமாகும்.

ஒவ்வொரு மாதமும் உங்களின் உடலினுள் நடப்பவற்றைப் பற்றிய படங்களானது உங்களுக்கு உதவியாக இருக்கும். அவைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சரி, இப்போது உங்கள் உடலினுள் நிகழும் செயல்பாடுகளின் உயிரியலைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் மாதவிடாய் ஏற்படும்போது எப்படிப்பட்ட உணர்வுக்கு ஆட்படுத்தப்படுகிறோம்? ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டு. ஒருவர் மாதவிடாய் ஏற்படும் போதும், அது ஏற்படும் முன்னரும் பின்னரும் கொண்டுள்ள உணர்வானது மட்டவர்களுடையதைப் போல் இருப்பதில்லை. இது மாததிற்கு மாதம் கூட மாறுபடலாம். ஆனால் மாதவிடாயின் சில பொது குணாதிசயங்கள் எல்லொருக்கும் ஒரேப் போல உள்ளன. எனவே நாம் இப்போது அதைப் பற்றி பார்ப்போம்.

உங்கள் முதல் சில மாதவிடாய்கள்:

மாதவிடாய் ஏற்படும் போது ஏதோ திரவம் உங்கள் யோனியின் வழியக கசிவதை நீங்கள் உணரலாம். ஆனால் சில தடவைகளுக்குப் பின்னர் இதை நீங்கள் அந்த அளவிற்கு கவனிக்காமல் கூட விட்டு விடக் கூடும். வழக்கமாக முதல் நாள் கசிவானது குறைவாகத் தொடங்கி இரண்டாவது நாளும் அதற்கு மேலும் அதிகமாகிறது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில் எல்லாப் பெண்களும் எப்போதும் ஒழுங்கான சுழற்சியை கொண்டிருப்பதில்லை. குறிப்பாக முதல் சில வருடங்கள் சுழற்சி ஒழுங்காக அமைவதில்லை. உங்களுடைய உடம்பு இதற்காக தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு சற்று நேரத்தை எடுத்திக் கொள்ளலாம். எனவே ஒழுங்கற்ற மாதவிடாயை பார்த்து பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் தொடர்ந்தாலோ, நீங்கள் ஒரு பெண்கள் நல மருத்துவரை சந்திப்பது நலம் பயக்கும்.

தசைப் பிடிப்பு (Cramps):

சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அடிவயிற்றுப் பகுதியிலோ, முதுகின் கீழ் புறத்திலோ தசைப் பிடிப்பு தொடங்கி மாதவிடாயின் முதல் தினங்களில் நிற்க வாய்ப்புள்ளது. ஆனால் பலப் பெண்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்படுவதில்லை. எனவே உங்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்படவில்லையானால் அது நல்ல விசயமே. வலியானது அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கீழ்கண்ட மருத்துவ முறைகளை கையாளலாம்.

1. கதகதப்பான தண்ணீர் பாட்டிலை அடி வயிற்றின் மீது வைக்கலாம்
2. மித சக்தியுள்ள வலி மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
3. உடற்பயிற்சி செய்யலாம். உண்மயில் உடற்பயிற்சியானது மாதவிடாய் தசைப் பிடிப்பை போக்குவதற்கான சிறந்த முறையாகும்.


தொடரும்......