
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகையாகாது.
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையல்ல. எந்தமாதிரியான தருணத்தில், எந்த முறையில் நாம் அந்த உறவைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே அது நஞ்சாகிறதா? அல்லது அமிர்தமாக ருசிக்கப்படுகிறதா? என்பது தெரியவரும்.
காமம் என்பது உடலின் பல்வேறு உணர்ச்சிகளில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் என ஒவ்வொரு பழத்திற்கும் ஒருவித சுவை இருப்பதைப் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காம உணர்ச்சி என்பது, அவர்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம்.
நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது, நோய் நிவர்த்திக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு மருந்தை உட்கொள்கிறோம். அதனால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதைப் போலவே பாலுறவையும் எடுத்துக் கொள்ளலாம்.

கிராமங்களில் பொதுவாக ஊர் சுற்றிக்கொண்டு, வீட்டிலிருக்கும் பெரிசுகளுக்குக் கட்டுப்படாமல் திரியும் விடலைகளைப் பார்த்து, ``சீக்கிரம் இவனுக்கு கால்கட்டு போடணும், அப்பத்தான் சரியா வருவான்' என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.
அதாவது, வாலிப முறுக்கேறித் திரியும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், உரிய நேரத்தில் அவர்களின் மனோநிலையை மாற்றி, பொறுப்புள்ள மனிதனாக்கலாம். திருமணம் முடிந்தால், மனைவியைச் சுற்றி வருவான். வாழ்க்கையில் ஒரு பந்தம், பிடிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே அப்படிக் கூறுவார்கள்.
காமம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மனிதன் விடுபடுவதற்கு ஒரு முக்கியமான உணர்வாகத் திகழ்கிறது. தவிர, மனித வாழ்க்கை எனும் தாத்பர்யத்தில் தாம்பத்யம் மூலமே சந்ததி பெருக்கம், இனவிருத்தி ஏற்படுகிறது.
எனவே எதற்காக வாழ்கிறோம் என்றால், அடுத்த சந்ததியினரின் நலனுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம். இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது பாலுறவு அல்லது காம உணர்ச்சியே.
திருமணத்திற்கு முன்பே பாலுறவு????பாலுறவு குறித்து பல்வேறு தகவல்களை இப்பகுதியில் அறிந்து வருகிறோம். சிலர் (ஆண்/பெண்) திருமணத்திற்கு முன்பே அறிந்தோ அல்லது அறியாமலோ சிலருடன் பாலுறவு தொடர்பு வைத்திருந்திருக்கலாம். அல்லது `அந்த உறவு' எப்படித்தான் இருக்கும்?
அதையும் தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் கூட யாருடனாவது பாலுறவு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி உறவு வைத்துக் கொண்ட பலர் தங்களுக்குள் தேவையில்லாத பயம் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ பாலுறவு வைத்துக் கொள்வதற்குப் பயந்து, சுயஇன்பம் அனுபவித்தவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு சுயஇன்பம் அனுபவிப்பதால், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது ஏதாவது பாதிப்பு வருமோ என்ற அச்ச உணர்வு இருக்கக்கூடும். உதாரணத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். விரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் ஒருவருக்கு, இதுபோன்ற ஒரு பயம் ஏற்பட்டது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் அந்த நபர் இருமுறை பாலுறவு கொண்டாராம். ஆனால், அப்போது ஒருவித நெருக்கடி இருந்ததன் காரணமாக அவரால் முழுமையாக உடலுறவு கொள்ள முடியவில்லையாம்.
மேலும் சமீபகாலமாக வாரம் ஒருமுறை சுயஇன்பம் அனுபவித்து வருவதாகவும், வெளியேறும் விந்துவின் அளவு ஒருமுறை அதிகமாகவும், வேறொரு முறை குறைவாகவும் வெளியேறுவதாகவும் கூறியுள்ளார். அதற்கு மருத்துவர் அளித்துள்ள பதிலில், இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

மனதளவில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்து, திருமணத்திற்குப் பின் உரிய முறையில் உறவு கொள்வதில் மனோநிலையை செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார்.
பொதுவாக பயத்துடனான நெருக்கடி இருக்கும்பட்சத்தில், சரிவரை பாலுறவு வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.
முடிந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டு டென்ஷனுடனேயே இருப்பாரானால், அதுவே திருமண வாழ்விற்கு சிக்கலாகி விடக்கூடும். தேவையற்ற பயத்தைத் தவிர்த்து, வேறு ஏதாவது பிரச்சினை இருப்பதாக உணருவாரானால், உரிய மருத்துவ பரிசோதனையை எடுத்துக் கொள்வது அவசியம்.

இந்த உதாரணத்தை ஏன் நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம் என்றால், நம்மில் பலருக்கு இதுபோன்ற பய உணர்ச்சி இருக்கக்கூடும். அறிந்தும், அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறுக்காக மனதளவில் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
திருமணம் முடிவான பிறகு புதிய வாழ்க்கையை எவ்விதம் உற்சாகமாக, உன்னதமாக - மகிழ்ச்சிப்பூர்வமாகத் தொடங்கி, கொண்டுசெல்லப் போகிறோம் என்பதில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும்.
