நண்பன் மனைவி மீது மோகம் ஏற்படுவது தவறா? அதனால் உனது வாழ்க்கை???

கேள்வி : என் வயது 29; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நான் வேலை பார்க்குமிடத்திலிருந்து, வெகுதொலைவில், என் சொந்த ஊர் உள்ளதால், வார விடுமுறைக்கு மட்டுமே ஊருக்கு செல் வேன். அப்போதும்கூட, நான், என் வீட்டிலேயே தங்க மாட்டேன். எனக்கு சிறு வயதிலிருந்தே பழக்கமான நண்பனின் வீட்டிற்கு சென்று விடுவேன்.

என் நண்பனின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு மு ன், மணமானது. அவர் எனக் கும் சொந்தந்தான்; அவருடைய மனைவி, நடிகையை போன்று, மிக அழகாக இருப்பார். இப்போது அவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

என் நண்பன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகமானார். நானும், என் நண்பனும் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த பெண் இடையில் வந்து பேசுவாள். இந்தப் பழக்கம், சாதாரணமானதாக தொடங்கி, மணிக்கணக்கில், ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி, நகைச்சுவையுடன் பேசுவது என, இரண்டு வருடம் தொடர்ந்தது.

பேசும்போதே இரட்டை அர்த்தத்தில் விடுகதை, ஜோக் சொல்வாள். இதை, ஆரம்பத்தில் நாங்கள் தவறாக நினைக்கவில்லை. ‘ஜாலியான டைப், கள்ளம் கபடமில்லாமல் பேசுறாங்க’ என்று, நினைத்தோம். அதனால், நாங்களும், செக்ஸ் பற்றிய சந்தேகங்களை கேட்போம்; அதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொல்வாள். இதனால், அந்த பெண்ணிற்கு, ‘மாத்ருபூதம்’ என்று, பெயர் வைத்தோம்.

அவ்வாறு பேசும் போதெல்லாம், அந்த பெண் என்னை உற்றுப் பார்ப்பதுடன், திடீரென்று யாருக்கும் தெரியாமல் கண்ணடிப்பாள். அப்போது, எனக்கு, ‘ஷாக்’அடிப்பதுபோல் இருக்கும்.

இதனால், என் வேலையில் கவனம் இல்லாமல் போனதுடன், சின்ன சின்ன விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. முதன் முதலில், இந்த பெண்ணை பார்த்தவுடன், இவளைப் போன்றே எனக்கும் மனைவி அமைய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை, பேராசையாக மாறி, அவள் மீது, காதலாக மலர்ந்தது. இதை, நான், அவளிடம், சொன்னதற்கு, ‘எனக்கு கல்யாணமாகி, இரண்டு குழந்தையும் ஆயிடுச்சு. இல்லாட்டி, உங்களோட ஓடி வந்துடு வேன்…’ என்று, சொன்னாள்.நான், அவளை விரும்புவது, தவறுன்னு அறிவுக்கு தெரியுது. ஆனா, மனசுக்கு தெரியலை.

எப்போதும், அவள் நினைவாகவே இருந்தது. இதனால், நாங்கள் தவறு செய்ய துணிந்து, நெருங்கியும் விட்டோம். ஆனால், தவறு செய்யவில்லை.
இந்நேரத்தில் தான், எனக்கு திருமணம் நடந்தது. இப்போது, அவளை மறக்க முடியாததால், என் மனைவியுடன் முழு மனதுடன் வாழமுடியவில்லை. ஆனால், என்மனைவி, மிகவும் அன்பானவள். என் வாழ்க்கையும், அவள் வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருக்க, நீங்கள் தான் ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —

பதில் : ‘திருமணமான பெண்ணை விரும்புவது தவறுன்னு அறிவுக்கு தெரிகிறது; மனசுக்கு தெரியலையே… அதனால், நாங்க இருவரும் தவறு செய்ய துணிந்து, நெருங்கி விட் டோம். ஆனால், எந்த தவறும் செய்யவில்லை. இந்த சூலில், நான் என்ன செய்ய வேண்டும்…’ என்று கேட்டு, தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. உன் பிரச்னையை நானும் நன்கு உணர்கிறேன்.

மகனே… மிருக குணத்துடன் தவறு செய்ய துணிந்தும், அவ்வாறு தவறு செய்யாமல், நல்ல மனிதனாக இருந்த, உன் பண்பை பாராட்டுகிறேன். இன்னும், உள் மனதில், நீ நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். பிரச்னையின் வீச்சு, அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்தும் வைத்திருக்கிறாய்.

ஒன்றை தெரிந்து கொள்… எவர் ஒருவர், பிரச்னையை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறாரோ, அவர், தம் பிரச்னையில் இருந்து விடுபட, அதிக நாட்கள் ஆகாது. பலரு க்கு இருக்கும் பிரச்னையே, அவர்களது பிரச்னை புரியாமல், அதனுள்ளேயே உழன்று கொண்டிருப்பது தான்.

உனக்கு திருமணமாவதற்குமுன், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற பெண்ணிடம், செக்ஸ் சம்பந்தப்பட்ட பேச்சுகளை நேரம்போனதே தெரியாமல்,இரட்டை அர்த்தத்துடன் பேசி மகிழ்ந்திருக்கி றீர்கள். 

ஆனால், நீ, உள் மனதில், அப்பெண்ணை அடைந்தே தீர வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன், காய்களை நகர்த்தியிருக்கிறாய்.
இந்நிலையில், உனக்கு திருமணமானபின், அந்த பெண்ணை மறக்க முடியாததால், உன் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க முடியவில்லை. இதனால், பல சங்கடங்களுக்கு உள்ளாகியிருக்கிறாய். இவை எல்லாம் போதா தென்று, அப்பெண் கண்ணடிக்கிறாள், பார்க்கிறாள் என்று, பித்து பிடித்தவன் போல, புலம்பிக் கொண்டிருக்கிறாய்.

நன்றாக யோசித்துப் பார். ரோட்டில் ஒரு பெண் எதிரே வரும்போது, அவளை பார்க்கிறோம். அவள் நம்மை கடந்த பிறகும், மீண்டும் பார்க்க வேண்டும் என, மனதில் ஒரு கட்டளை வந்தவுடன், அருகில் இருப்பவரிடம், ‘இவளை எங்கோ இதற்கு முன் பார்த்திருக்கிறேனே…’ என்று, சில நிமிடங்கள், அவளைப் பற்றி பேசி மகிழ்வது கிடையாதா!

அதைப் போன்று, உன் உறவும் ஏன் முழுக்க முழுக்க, கற்ப னையாக இருக்கக் கூடாது? உன் கடிதத்தை படித்தவுடன், எனக்குள் எழுந்த கேள்விகள்…
திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், மணமாகாத இரண்டு விடலைப் பையன்களுடன், ‘செக்ஸ்’ பற்றி அதிகம் பேச காரணம் என்ன?
தன் கணவர் வீட்டில் இருக்கும்போது கூட, உன் போன்ற நபர்களுடன், இம்மாதிரி ஜோக் அடித்து பேசுவாரா?

அப்பெண்ணின் கணவருக்கு, இவர் இப்படிப் பேசுவது தெரியுமா?
இப்போது தவறு செய்யவில்லை… இனியும் தவறு செய் யாமல், நீங்கள் இருவரும் இருப்பீர்களா அல்லது வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்துவீர்களா?

உன் மனைவிக்கு உன் லீலைகளைப் பற்றி தெரிய வந்தால், அவள் என்ன நினைப்பாள்? இப்போது உடனடியாக நீ செய்ய வேண்டியது என்னனென்ன என்று பார்ப்போம்…
அடுத்தவரின் மனைவியுடன் பேசும்போது, உன் எல்லையை, தெரிந்து வைத்திருப்பது.

சமுதாயத்தில் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவு முறையா? என நினைத்து, அப்பெண்ணிடமிருந்து விலகி செல்.
நடைமுறைக்கு ஒத்துவரக் கூடிய நிகழ்வுகளைப் பற்றி நினைத்து, செயல்படுத்து. கற்பனை உலகில் இருப்பதை தவிர். மீண்டும் மீண்டும் இப்பிரச்னையே மனதில் வந்து, உன் வாழ்வில் தொந்தரவுகள் ஏற்பட்டு, மனநிம்மதியை இழக்க இருக்கும் பட்சத்தில், நல்ல மனநல மருத்துவரை அணுகு.

சுவையான கனியாக உன் மனைவி இருக்கும்போது, தேவையில்லாத பிரச்னை தரக்கூடிய அடுத்தவரின் மனைவியான காயை, நீ தேர்வு செய்ய மாட்டாய் என, நம்பிக்கையுடன் உன் வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்- அமிர்தா